ஒரு மழை இரவின் நட்பு

எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை. எங்கிருந்தோ வந்த குளிர்காற்றின் தீண்டலில் தூக்கம் கலைந்து எழுந்த போது சின்னதாய் தூறல் விழ ஆரம்பித்திருந்தது. அதற்கு மேல் தூக்கம் பிடிக்காமல் ஜன்னலின் அருகில் வந்து அமர்ந்தேன். தூறல் இப்போது பெருத்து பெரும் மழையாய் கொட்ட தொடங்கியது. விடிய விடிய விழித்திருக்கும் வீதியில் அன்று மட்டும் அரவம் இல்லை. வழக்கமாய் நடக்கும் நள்ளிரவு நாய்கள் மாநாடு அன்று ஒத்திவைக்கப்பட்டிருந்தது. எனக்கு துணையாய் என் வீட்டிற்கு எதிரில் நின்றிருந்த மரங்களும் ஆங்காங்கே சில மின் கம்பங்கள் மட்டுமே.

மின் விளக்கின் ஒளியில் மின்னும் மழைத்துளிகளை நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க இந்த மரங்கள் மட்டும் எது குறித்தோ தீவிரமாய் விவாதித்துக்கொண்டிருந்தன.திட்டமிட்டே எனக்கு புரியாததொரு மொழியில் பேசிக்கொள்வதாய் தோன்றியது. மீண்டும் எப்போது கண்ணயர்ந்தேன் என்று தெரியவில்லை.கண் விழித்தபோது மழை நின்றிருந்தது. பொழுதும் விடிந்திருந்தது. சிறு குழந்தையின் குதூகலத்தோடு வெளியில் ஓடிவந்தேன். வழியெங்கும் மஞ்சளும் சிகப்புமாய் மலர்க்குவியல். இரவு பெய்த மழையில் மலர்ந்தும் மலராதும் உதிர்ந்த மலர்கள் அவை. அதுவரை புரியாதிருந்த மரங்களின் மொழி அப்போது புரிய துவங்கியது. எனக்கு புரிந்தது மரங்களுக்கும் புரிந்திருக்க கூடும். அதனால் தான் என்னவோ எஞ்சியிருந்த துளிகளை எல்லாம் என் தோள்களில் சிந்தி, சின்னதாய் குலுங்கி அழுதன மரங்கள். இப்படியாய் அரவமற்ற ஒரு மழை இரவின் ஆழ்ந்த நிசியில்  மலர்ந்தது ஒரு நட்பு.

 

What do you think? Tell us in Comments.